புதுவை சித்தர்கள்

(சித்தர்களின் வரலாறு)

ஶ்ரீமத் குரு சித்தானந்தர் சுவாமிகள் குரு பூஜை விழா

காசி....!காசியை, ‘ஒளிப் பிழம்பு’ என்பார்கள். அதோடு காசி என்பது தரையில் இல்லை, அது சற்றே உயரத்தில், சிவனின் திரிசூலத்தின் மீது இருக்கிறது என்றும் சொல்வர். இதற்குக் காரணம், ‘காசி’ என்பதற்கு நிலத்தில் ஒரு பொருள் உருவமும், அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய சக்தி உருவம் இம்மண்ணை விட்டு சற்றே உயரத்தில் இருக்குமாறும் அமைத்தார்கள். இந்த சக்தி உருவம் தரையில் இல்லாமல், மேலே நிறுவப்பட்டிருப்பதால், காசி தரையில் இல்லை, சற்று மேலே உள்ளது என்றார்கள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர். இதை எந்த அளவிற்கு விஞ்ஞானம் என்று ஒப்புக்கொள்வீர்கள் என சொல்ல முடியாது. இருப்பினும், அமெரிக்காவில் இருந்து வந்த சிலரும், சில ருஷிய விஞ்ஞானிகளும் ‘கிர்லியன் ஃபோடோகிரஃபி’ என்ற தொழில்நுட்பம் வாயிலாக காசியைப் படம் பிடித்தார்கள். அந்தப் படங்களில், விண்வெளியில் இருந்து காசிக்கு பல அணுத்துகள்கள் வருவதாகத் தெரிகிறது. இதை வெளிச்சத்தின் தூறல்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதுவே நம் அனுபவத்தில், நாம் உணர்ந்து அறிந்த உண்மை. காசி என்பது 168 மைல் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைத்தற்கே அரிய சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சக்திநிலை. இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை.
சிவன் வடிவமைத்த காசியின் வடிவியல்
168 மைல் சுற்றளவில்
468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்கள்
காசி நகரின் வெளி வட்டம், ‘சௌராசிக்ரோஷி யாத்ரா’ 168 மைல் சுற்றளவு, 144 சக்திமையங்கள் இந்த வெளிவட்டத்துள் இன்னும் 4 சிறிய வட்டங்களாக, ‘பஞ்சக்ரோஷி யாத்ரா’ 55 மைல் சுற்றளவு, 108 சக்தி மையங்கள் ‘நகரப் பிரதிக்ஷனா’, 16 மைல் சுற்றளவு, 72 சக்தி மையங்கள் ‘அவிமுக்த’, நகரைச் சுற்றி 4 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் ‘அந்த்த க்ருஹ’ காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றி 7 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் என ஐந்து வட்டங்களில் 468 சக்தி மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு வட்டத்திலும், வெவ்வேறு அளவிலான சக்தி தீவிரம் இருக்கும். உள்ளே செல்லச் செல்ல, சக்தியின் தீவிரம் அதிகரிக்கும். இது உடலின் பஞ்சகோஷ அமைப்பை குறிப்பதாகவும் இருக்கிறது. காசி விஸ்வநாதர் கோவிலும் இதே அமைப்பில் ஆனால் சிறிய அளவில் அமைக்கப்பட்டது. அது மிக மிக நுணுக்கமாக, பலவற்றைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் இது தகர்க்கப்பட்டு, இன்று அவ்விடத்தில் மசூதி அமைந்து, இன்றைய கோவில் ஒரு ஓரமாக சின்ன இடத்தில் நிற்கிறது. நம் உடலில் மொத்தம் 72000 நாடிகள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர். கோவிலும் சரி, நகரமும் சரி இதை ஒத்தே இருந்தன.
ஏன் 5: பஞ்சபூதங்கள் 5 என்பதாலும், சிவன் பூதேஷ்வரா என்பதாலும், இந்நகரை 5 இன் அடிப்படையில் அமைத்தார்கள்.
ஏன் 468: நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்சபூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468 சக்தி ஸ்தலங்கள். பஞ்ச பூதங்களில் ஆகாஷைத் தவிர்த்ததற்குக் காரணம், நம் உடலின் அமைப்பில், நீர் 72%, நிலம் 12%, காற்று 6%, நெருப்பு (உடல் சூடு) 4%, ஆகாஷ 6%. இதில் மற்ற நான்கையும் நாம் சரியான வழியில் பார்த்துக் கொண்டால் போதும். ஆகாஷ பற்றி நாம் ஏதும் செய்வதிற்கில்லை.
ஏன் 108: நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் அமைக்கப்பட்டன. இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் காசியை உருவாக்கினார்கள். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்? 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப் பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம்!
ஏன் காசி: இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியைப் போற்றி வந்தனர். இதை மதம் சம்பந்தப்பட்ட இடமாக நினைப்பது மிகக் குறுகிய கண்ணோட்டம். இது மதம் சம்பந்தமட்ட இடமல்ல. ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கும் ஏக்கத்தை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி, அதை நிறைவேற்றுவதற்காக, முறையான தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட சக்தி யந்திரம், இந்த காசி. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம்! இன்றளவும் ஆன்மீக வாய்ப்பை அள்ளி வழங்கும் இடமாக அறியப்பட்டாலும், இசை, கலை, கல்வி, கைவினைப்பொருட்கள், பட்டு நெசவு என பல்வேறு துறைகளிலும் காசி புகழ் பெற்றிருக்கிறது. ஆயுர்வேதம் கூட காசியில்தான் எழுதப்பட்டது. யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான். இசையில் தலைசிறந்த பாடகர்களும், கணிதத்தில் புகழ்பெற்றவர்களும் வாழ்ந்த இடம் காசி. இந்தியாவின் தலைசிறந்த சித்தார் மேதை பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் உஸ்ஸாத் பிஸ்மிலாகான் போன்ற பெருமைக்குரிய கலைஞர்களை உலகுக்கு வழங்கியதும் காசியே. ஆர்யபட்டா போல் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடிய மேதைகள் எல்லாம் இப்பகுதியிலிருந்து வந்தவர்கள்தான். இவர்கள் எல்லாம், உயிரோட்டம் நிறைந்திருந்த காசியின் கலாச்சாரத்தில் உருவானவர்கள். காசி என்னும் கருவியால், இத்தனை புத்திசாலித்தனமும், திறனும் இங்கு தோன்றியது. இதன் மூலம், சாதாரணமாக ஒரு மனிதன் அணுகமுடியாத பரிமாணங்களை எல்லாம் இவ்விடத்தில் வாழ்பவர்களால் அணுக முடிந்தது. இவை அத்தனையும் பிரபஞ்சத்தை தர்க்கரீதியாக பார்த்து, உருவாக்கப்பட்டவை அல்ல. இப்பிரபஞ்சத்தை, அது எப்படி இருக்கிறதோ அதை அவ்வாறே பார்த்தனர். இப்படி படைப்பின் தன்மையை, அது இருக்கும் நிலையிலேயே பார்ப்பவர்களின் புத்திசாலித்தனம், நம்பமுடியா அளவிற்கு பண்பட்டு முதிர்ச்சி அடைகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “இந்தியக் கணிதவியலின் துணை இன்றி, இன்றைய விஞ்ஞானம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”. இப்படிப்பட்ட கணிதம் தோன்றியது உயிரோட்டம் நிறைந்த காசியிலே, காசி எனும் மகத்தான யந்திரத்தின் துணையிலே!
சிவனின் ஏக்கம்: காசி நகரம் உருவானபின், அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதால், ஒரு அரசனின் கையில் அந்நகரை ஒப்படைக்க முடிவு செய்தார்கள். ஆனால் அதற்கான நிபந்தனை, தேவர்களும், முக்கியமாக சிவனும் காசிக்கு வரக்கூடாது என்பது தானாம். சிவன் காசிக்கு வந்துவிட்டால், பிறகு எல்லோரும் அவரையே பின்பற்றுவர். அரசனிற்கு அப்புறம் என்ன மரியாதை இருக்கப் போகிறது? இதற்கு ஒப்புதல் கொடுத்ததும், ஆட்சி கைமாறியது. சிவனும் கைலாயத்தில் இருந்தார். ஆனால் பார்வதியை மணந்தபின், பார்வதியால் கடுங்குளிர் தாங்க முடியாது என்பதால், மலையை விட்டு கீழிறங்க வேண்டிய கட்டாயம் சிவனிற்கு ஏற்பட்டது. தங்குவதற்கு சரியான இடம் தேடியவர், காசியைப் பார்த்ததும், அவருக்கு வேறு எங்கு தங்குவதற்கும் மனம் ஒப்பவில்லையாம். ஆனால் அவர் காசிக்குள் வருவதற்குத் தடை இருக்கிறதே! அதனால் காசிக்குள் வருவதற்கு அவர் பல தந்திரங்களையும் கையாண்டு, ஒன்றும் பலிக்காமல், கடைசியாக காசி மன்னன் திவோதாசனுக்கு முக்தி ஆசை காட்டி, அவருக்கு முக்தி வழங்கி அதன் பின்னே தான் அவர் காசிக்குள் வரமுடிந்ததாம். உள்ளே வந்தவர், இனி காசியை விட்டுப் பிரியேன் என்று சொன்னாராம். அதனால் அங்கு ‘அவிமுக்தேஷ்வரா’ எனும் கோவிலும் உண்டு. இக்கதைகள் அனைத்தும் காசியில் வாழ ஒவ்வொருவரும் எவ்வளவு ஏங்குவர் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டது.

ஒகர வரிவடிவத்தின் சிறப்புஒ என்ற உயிர்எழுத்தானது தெய்வீகத்தன்மை
வாய்ந்தது. உள் உறுப்புக்களின் வடிவம், மூளைக்கருக்கள் போன்றவற்றை ஒப்பிடும்போது காணலாம். இவை பக்கச்சார்பான வரலாற்றை காட்டுவதாக உள்ளது

காரணகுரு, காரியகுரு ...!

'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.
காரியகுரு
காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)
காரணகுரு
எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.
அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.
காலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும்போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ளவேண்டும்.
மெஞ்ஞான காரணக்குரு இன்றி சிவத்தை அடைய முடியாது.
குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்
- ஆசான் ஒளவையார்
சிவத்தை அடைய முற்றுப்பெற்ற மெஞ்ஞானக் குருவாகிய ஞானிகளை/ சித்தர்களை வழிபடுதலே முறை என்கின்றது தமிழ்மறையான திருமந்திரம்.
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.
- திருமந்திரம் 2119

அருட்பெரும்சோதி, அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்சோதி...!
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.


 சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே


 

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.
சோதனைக்குழாய் குழந்தை
உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.
தொலைக்காட்சி பார்த்தவர்
முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.
அணுவுருவில் நதிகள்
அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

மகான் பட்டினத்தார்..!

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி.11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டிணத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர்.
பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு புத்தருக்கு இணையாக தமிழகத்தில் கருதப்படுகின்றது. அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கவுரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை.
அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்` என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.
பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங் களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள்.
அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட மனம் கசிந்து அழுது விடுவார்கள்.
அந்தப் பாடல்கள் பின் வருமாறு..
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தே என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.

வரவிருக்கும் முக்கிய தினங்கள்

About this blog

சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.

அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.

மேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.

மகான் படே சாஹிப் வரலாறு

மகான் படே சாஹிப் வரலாறு
(படத்தின் மேல் சொடுக்கவும் )

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்
(படத்தின் மேல் சொடுக்கவும் )

Labels

About This Blog

தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....

நன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்


மேலும் தொடர்புக்கு :


Email : davemathavan@gmail.com

R.V.Karthikeyan
Cell No:
+919994312344
S.Mathavan
Cell No:
+919944287310


மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

About Me

Karthikeyan rvk. and S.Mathavan
Puducherry, Puducherry, India
I'm a very calm person. My strength is my sincerity. My victory formula is "DDT"
View my complete profile

Total Pageviews

Followers

Powered by Blogger.