புதுவை சித்தர்கள்

(சித்தர்களின் வரலாறு)

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலை

"ஓம் க்ரியா  பாபாஜி நம ஓம்"

 ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். மஹா அவதார்  பாபாஜியின் அருள் கொண்டு, பாபாஜியின் உருவ சிலை காகிதகூழ் பொம்மையால்(Papermesh)
ஒரு அடி  உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாபாஜி ஐயாவின் உருவ சிலை வேண்டுமாயின் தயை  கூர்ந்து கீழ்கண்ட முகவரிக்கு அணுகவும்
davemathavan@gmail.com
(தொகை : 600 ரூ + அஞ்சல்  தொகை )

அன்பான கவனத்திற்கு : மேற்கூறியவை வெறும் வியாபாரத்திற்காக கொடுக்கப்பட்டது அன்று. பாபாஜி ஐயாவை அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்பதற்காக அடியவனால் எடுக்கப்பட்ட ஒரு மிகச்சிறிய முயற்சியே .

விநாயகர் சதுர்த்தி :இந்து மதத்தில் விநாயகர் வழிபாடு என்பது முழு முதலானது. புதிய காரியங்கள் தொடங்கும் போது, மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து ஆரம்பிப்பது வழக்கம். தனக்கு மேல் யாருமில்லாத முழு முதல் நாயகனான விநாயகரை விரும்பி வணங்கினால் வேண்டும் வளங்களை அள்ளி தருவார். இதையே லலிதா சகஸ்ரநாமத்தில் மஹா கணேச நிர்பின்ன விக்னமந்த்ர ப்ரஹர்ஷிதா என குறிப்பிட்டு உள்ளது. அத்தகைய சிறப்பு பெற்ற கணபதியை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி திருநாள் நாளை வருகிறது.

இந்நாளில் விநாயகரின் வடிவங்கள், அருகம்புல்லின் மகிமை, தோப்புக் கரணத்தின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். விநாயகரின் வடிவங்கள் யானைமுக கடவுளின் திருமேனி ஞானவடிவானது. அவருடைய ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனி சிறப்பு உண்டு. விநாயகரின் திருவுருவை களிமண்ணாலும், பசுஞ்சாணியாலும் உருவாக்கலாம். மேலும் கருங்கல், பளிங்கு கற்கள், மற்றும் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை உள்ளிட்ட உலோக வடிவிலும் விநாயகர் காட்சி தருகிறார். திபெத், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் விநாயகர் நர்த்தனமாடும் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

பிள்ளையார் சுழியின் பெருமை எழுத்துக்கு எல்லாம் மூலம் பிரணவம். ஓம் என்பது பிரணவத்தின் வடிவம். பிரணவத்தின் பொருளை பிரம்மனின் தலையில் குட்டி விநாயகர் எடுத்துரைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒரு செயலை செய்வதற்கு முன் போடப்படும் பிள்ளையார் சுழிக்கு முதலில் ஒரு வட்டம் எழுதி வட்டத்தின் முடிவை உ என்பதை போல் ஒரு நீள்கோட்டில் முடிக்க வேண்டும். மோதகத்தின் தத்துவம் விநாயகருக்கு மோதகம் எனும் கொழுக்கட்டை மிகவும் பிடித்தமான நைவேத்தியம்.

வெள்ளை அரிசி மாவினுள் இனிப்பான தேங்காய் வெல்ல பூரணத்தை வைத்து படைப்பதன் மூலம் அவரது பரிபூரண பிரம்மத்தை காணும் பாக்கியத்தை அடையலாம். மோதகத்தை மூடியிருக்கும் வெள்ளை மாவுப் பொருள் விநாயகரின் வெளித்தோற்றத்தையும் உள்ளே இருக்கும் வெல்ல பூரணம், விநாயகரின் இனிய குணத்தையும் பிரதிபலிக்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று 21 மோதகங்களை விநாயகருக்கு படைக்க வேண்டும் என்பது நியதி.

அருகம்புல்லின் அருமை

அனலாசுரன் என்ற அரக்கன் ஏராளமான தவ வலிமைகளை பெற்று, தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனது கொடுமை தாங்காமல் விநாயகரிடம் அவர்கள் முறையிட்டனர். விநாயகரும் தேவகணங்களும் அனலாசுரனை எதிர்த்து போரிட்டனர். அனலாசுரனின் அக்னி பார்வையில் தேவகணங்கள் சிதறி ஓடின. இதனால் கோபம் கொண்ட விநாயகர், அனலாசுரனை அப்படியே வாய்க்குள் போட்டு விழுங்கினார். விநாயகரின் வயிற்றை அனலாசுரன் அக்னியால் சுட்டெரித்தான். வயிற்றில் வெப்பம் தாளாமல் தவித்த விநாயகரின் தலையில் 2 அருகம்புல்லை ஒரு முனிவர் வைத்தார். இதனால் விநாயகரின் உடல் சூடு தணிந்து, அனலாசுரனும் எரிந்து சாம்பலானான். அருகம்புல்லால் ஓம் கணாத்யாய நம என்ற மந்திரத்தை கூறி விநாயகரை அர்ச்சித்து வருபவர்களுக்கு எல்லா வளங்களையும் விநாயகர் அள்ளி தருவார்.

தோப்புக்கரணத்தின் மகிமை

கஜமுகன் என்ற அரக்கன், முனிவர்களும் தேவர்களும் நாள்தோறும் காதுகளை பிடித்து 1008 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும், தன்னை பார்த்தபடி நெற்றியில் குட்டி கொள்ள வேண்டும் என்றும் தண்டனை விதித்தான். இதை அறிந்த விநாயகர் தன்னுடைய துதிக்கையில் கொம்பு ஒன்றை உடைத்து, சிவனின் நினைத்து கஜமுகன் மீது ஏவினார். இதனால் கஜமுகனின் அசுர முகம் அழிந்து, பெரிய எலியாக உருமாறினான். பின்னர் விநாயகரின் அருள்பார்வையால் அவரது வாகனமாக மாறினான்.

அதன்பின், தோப்புக்கரணத்தையும் நெற்றியில் குட்டி கொள்வதையும் தேவர்களும் முனிவர்களும் விநாயகரிடம் விரும்பி செய்ய ஆரம்பித்தனர். இந்த வழிபாடே இப்போதும் தொடர்கிறது. நெற்றி பொட்டில் இரண்டு கைகளால் குட்டி கொள்வதன் மூலம் நம் உடலில் உள்ள குண்டலினி சக்தி புத்துணர்வு பெற்று, உடல் இயக்கங்களும் சீராக நடைபெறுகின்றன. தோப்புக்கரணத்தின் மூலம் மனதை கட்டுப்படுத்தும் வலிமையும் கிடைக்கும் என்பது அறிவியல்பூர்வ உண்மை.

வழிபாட்டு முறை

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை எழுந்து குளித்து விநாயகரை வணங்க வேண்டும். பின்னர், களிமண் விநாயகர் சிலையை விரிசல் எதுவும் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் மரப்பலகையிட்டு அதில் கோலம் போட்டு, அதன்மேல் நுனி வாழை இலை வைக்க வேண்டும். அதில் பச்சரிசியை பரப்பி, அதன்மேல் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகருக்குப் பிடித்த அருகம்புல், எருக்கம் பூ மாலை மற்றும் பல்வேறு மலர் மாலை களை சூட்ட வேண்டும். விநாயகரின் நெற்றியில் விபூதி, குங்கு மம், சந்தனம் இட வேண்டும். விநாயகரின் வயிற்றில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அதன்மேல் துண்டு சாற்ற வேண்டும். பின்னர் விநாயகருக்கு பிடித்த மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பின்னர் கொழுக்கட்டை, பால், எள் உருண்டை, அப்பம், அவல், மா, பலா, வாழைப்பழம், தேங்காய் படைக்க வேண்டும். கற்பூர ஆரத்தியின் போது, ஓம் தத்புருஷாய வித்மஹே, வக்ர துண்டாய தீமஹி, நந்தோ தந்தி ப்ரசோதயாத்‘ எனும் கணேச காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இம்மந்திரத்தை நாள்தோறும் உச்சரித்தால், நமது உள்ளமும் உடலும் வலிமை பெறும். முன்வினைகள் தீரும். மாலையில் களிமண் விநாயகரை ஆறு, குளம், கிணறு, கடல் போன்ற நீர்நிலைகளில் விட வேண்டும். எக்காரணம் கொண்டும் சிலையை உடைக்க கூடாது. சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை நாம் அனைவரும் குடும்பத்துடன் கூடி கொண்டாடி மகிழ்வோம். விரும்பி வணங்கினால், இளகிய மனம் படைத்த விநாயகர் வளங்களை அள்ளி தருவார்.

  

"அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகர் அருளால் அனைத்து நலன்களும் பெற்று நலமுடன் வாழ்க".

 

"திருமந்திரம்"

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து
- ஆசான் திருமூலர்
(திருமந்திரம் 1726)
மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கமாகவும், அதுவே சிதம்பரமாகவும், மேலும் அதுவே சதாசிவமாகவும் மற்றும் திருக்கூத்துமாகவும் உள்ளது. இதில் திருக்கூத்து என்பது சுழிமுனைக்கதவு திறந்தபின் புருவமத்தியாகிய சுழிமுனையில் சந்திர ஒளி, சூரிய ஒளி, வன்னியாகிய அக்னிஒளி முச்சுடர்களும் மாறிமாறி இயங்கும். இதுவே திருநடனம் அல்லது திருக்கூத்து எனப்படும்.
இவ்வரிய வாய்ப்பு மனிதருக்கு இருந்தபோதிலும் புண்ணியபலமும், குருவருளும், இறையருளும் இல்லாததால் மனிதர்கள் இந்த வாய்ப்பை அடையமுடியவில்லை.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

- திருமந்திரம் - கேடு கண்டிரங்கல் - கவி எண் 2090

                                                                                          ”மெய்ப்பொருள் காண்ப தறிவு"

எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுகிறார்.


உலக போகங்களையெல்லாம் பெரிதாகக் கருதி அதில் மூழ்கிக் கிடக்கும் மனிதன் எல்லாம் வல்ல இறையாற்றலிடம் வேண்டுவது கூட அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்பமளிக்கும் விஷயங்களாகத்தான் இருக்கும். வேண்டுவது என்பதே தன்னை அதை அடையத் தயார் படுத்திக் கொள்ளவே என்பதை மனிதன் இறுதி வரை அறிந்திட்டான் இல்லை. என்ன தேவை, எதை நாம் வேண்டுதலின் மூலமாக அடைய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளல் பெருமானின் தெய்வ மணி மாலையைப் படித்துணர்ந்தவர்கள் அறிவார்கள். நாம் வேண்டுவது எல்லாம் சிற்றின்பத்திற்கு உதவும் விஷயங்களையே ஆகும். ஆனால், வள்ளல் பெருமான் வேண்டுகின்ற அனைத்தும் நமக்கு பேரின்பம் அளித்து நம்மை மரணமில்லா பெரு வாழ்வு நிலையை அடையச் செய்யும் அற்புதமான விஷயங்களாகும்.

அதைப் போலவே நாம் இன்பம் அடையும் பொருட்டு எத்தனையோ பாவச் செயல்களை சுயநலத்தோடு செய்து வாழ்கிறோம். நாம் செய்வது பாவம் என்று உணராமலேயே நிறைய பாவங்களைச் செய்கிறோம். அப்படியே அதைப் பாவம் என்று யாராவது சுட்டிக் காட்டினாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு பல நியாயங்களைக் கற்பிக்கிறோம். நாலு பேருக்கு நன்மை செய்யுமானால் எந்தச் செயலும் பாவமில்லை என்று முட்டாள் தனமாகப் பேசுகிறோம். அது எத்தனை பேருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும், பாவச் செயல் என்பது பாவமே அல்லாது புண்ணியமாகாது. பட்டினத்தார் சொல்வது போல சாஸ்வதம் என்று நீ நினைக்கும் எதுவும் கூட வராது. ஆனால், நீ செய்யும் பாவ புண்ணியங்கள் கூட வரும் என்கிறார். அதில் கூட ஒரு நுட்பம் உள்ளது. அதாவது பாவம் மட்டுமல்ல, புண்ணியமும் பல பிறவிகளைத் தரக் கூடியதாகும் என்பதுவே. எனவே பற்றற்ற, மனதின் சம்ஸ்காரங்கள் அற்ற நிலை மட்டுமே, அதாவது பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு வாழ்வது மட்டுமே மேன்மே தரக் கூடியதாகும். எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.

1. நல்லோர் மனதை நடுங்கச் செய்வது.
2. வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரை தடுத்து நிற்பது.
4. கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வது.
6. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்வது.
7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
8. தர்மம் பாராது தண்டஞ் செய்வது.
9. மண்ணோரம் பேசி வாழ்வழிப்பது.(தன் நிலத்திற்கு அருகில் உள்ள பிறர் நிலத்தை அபகரித்தல்)
10. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்வது.
11. களவு செய்வோர்க்கு உளவு சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசஞ் செய்வது.
14. வரவுபோக் கொழிய வழியடைப்பது.
15. வேலையிட்டுக் கூலி குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது.
17. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லி குடும்பங் கலைப்பது.
19. நட்டாற்றில் கையை நழுவ விடுவது.
20. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பழிந்தவளைக் கலந்திருப்பது.(கற்பு என்பதை மனம் சார்ந்த விஷயம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.)
22. காவல் கொண்டிருந்த கன்னியை அழிப்பது.
23. கணவன் வழி நிற்போரைக் கற்பழிப்பது.
24. கருப்பமழித்துக் களித்திருப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறப்பது.
27. கற்றவர் தம்மைக் கடுகடுப்பது.
28. பெரியோர் பாட்டிற் பிழை சொல்வது.
29. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
30. கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பது.
31. ஊன் சுவை உண்டு உயிர் வளர்ப்பது.
32. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
33. அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வது.
34. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்ப்பது.
35. வெயிலுக்கொதுங்கும் விருட்சமழிப்பது.
36. பகை கொண்டு அயலார் பயிர் அழிப்பது.
37. பொது மண்டபத்தைப் போயிடிப்பது.
38. ஆலயக் கதவை அடைத்தே வைப்பது.
39. சிவனடியாரைச் சீறி வைப்பது.
40. தவஞ் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
41. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்வது.
42. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பது.
43. தெய்வமிகழ்ந்து செருக்கடைவது.
என்று பாவங்களைப் பட்டியலிடுகிறார். படித்துப் பார்த்தால் பெரும்பாலான பாவங்களை நாம் செய்திருக்கிறோம் என்பது புலப்படும். இதை சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்றால், இதற்கு முன்னால் போனது போகட்டும். ''இனிமேலும் இது போன்ற பாவங்களைச் செய்யாமல் வாழும் வாழ்வைத் தா'' என்று இறையாற்றலிடம் வேண்டிக் கொள்வதற்குத்தான். ஏனென்றால் வேண்டுதல் என்பதே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு சங்கல்பம் தான்.

மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்கப் பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்கப் பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.

நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும். ஆதிக வெயில் அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும். ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.

இதில் எந்தக் குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன. நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.

சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான். 6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.

அண்டத்திற்குள் பிண்டம்..! பிண்டத்திற்குள் அண்டம்..!


அண்டத்திற்குள் பிண்டம்..! பிண்டத்திற்குள் அண்டம்..!
அண்ட, பிண்ட விசாரம்..!
பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன. நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது. அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.
அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் உஷ்ணதினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை. அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தை தாங்கக் கூடிய சக்தி உள்ளது.மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது. அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்

                                                                                            ”மெய்ப்பொருள் காண்ப தறிவு"

சித்தர்கள் யார்?

 

சித்தர்கள் யார்?
சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!
என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும்..
மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா!
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா!
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!
என்கிறார்.
ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு

                                                                             ”மெய்ப்பொருள் காண்ப தறிவு"

சரகலை பயிற்சி !


சரகலை பயிற்சி!
சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில் முதன்மையான கலையே சரகலை ஆகும்.இக்கலையினை ஆதியில் எம்பெருமான் ஈசன் மகாசக்தியான அன்னை உமையவளுக்கு உபதேசித்த உன்னத கலையாகும்.
சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகிய சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்டு பின் அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாக சித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப் பட்டவைகள் ஆகும்.
சிவன் சக்திக்குச் சொல்ல
சக்தி நந்திக்குச் சொல்ல
நந்தி காளங்கிக்குச் சொல்ல
காளங்கி மூலருக்குச் சொல்ல
மூலர் அகத்தியருக்குச் சொல்ல
என்ற சித்தர் பாடலின் படி ஆதி முதல் சித்தர் எம்பெருமான் ஈசனே ஆகும்.
சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே -
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் -
இவை முன்னோர் வாக்காகும். சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள் சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம் என்ற விளையாட்டுத் தனமாக நடந்து கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே பலித்து விடும். ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம் ,வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.
மேலும் சரகலை கற்று தேர்ச்சி பெற்றால் இல்லறத்தில் பூரணத்துவ நிம்மதி, சந்தோசம், மகிழ்ச்சி பெறுவதுடன் சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் என்பதற்கிணங்க ஆன்மீக இறைநிலை மெய்ஞான சித்தியும் அடையலாம்

                                                                                         ”மெய்ப்பொருள் காண்ப தறிவு"

ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம்

 

 

ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்ஷத்தின் - மகிமை
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
 சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்.
 ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறதுசிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
 சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?
குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
 ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,
 ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
 அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
 பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
 எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.

                                                                                             ”மெய்ப்பொருள் காண்ப தறிவு"

 

கிருஷ்ண ஜெயந்தி...


* அன்னையின் மடியில்...

சென்னை-காஞ்சிபுரம், காவேரிபாக்கத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் (வேலூர் மார்க்கத்தில்) அமைந்துள்ளது பூண்டி. இங்கு ஸ்ரீவேணுகோபாலஸ்வாமி திருக்கோயிலில் எழில்மிகு கிருஷ் ணனைத் தரிசிக்கலாம். ஸ்ரீகிருஷ்ணன் அன்னை யசோதையிடம் பால் குடிக்கும் அமைப்பில் - வெள்ளியினால் ஆன அந்த விக்கிரகமும் தரிசனமும் வேறெங்கும் காண்பதற்கு அரிதானது! இப்படி, பால் குடிக்கும் பாலனை தொழுவோர்க்கு புத்ர பாக்கியம் நிச்சயம். மேலும், பெண்களுக்கு வரக்கூடிய மார்பக நோய்களையும் தீர்த்துவைக்கும் மாயக்கண்ணன், இவன் என்கிறார்கள்.

* நான்கு கரங்களுடன் ஸ்ரீவேணுகோபாலன்!

செங்கல்பட்டில் இருந்து மெய்யூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது களியபேட்டை. இங்கே ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியின் திருவடிவம் ஒப்பற்றது. ருக்மினி, சத்யபாமா சமேதராக நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜனாக இவர் அருள்வது விசேஷம்!

மேலிரு கரங்களில் சங்கு- சக்கரம்; கீழிரு கரங்களில் புல்லாங் குழல் கொண்டு சேவை சாதிக்கிறார் இந்த பெருமாள். இந்தத் திருவடிவம் விஜயநகர ஆட்சிக்காலத்திய வேணுகோபால வடிவங் களில் குறிப்பிடத்தக்கது எனலாம். நின்ற கோலத்தில் அருளும் தெய்வ வடிவங்களில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வளைவுகளை (த்விபங்கம் அல்லது த்ரிபங்கம்) தரிசிக்கலாம். ஆனால், இந்த மனங்கவரும் கோபாலன் ஐந்து வளைவுகளுடன் (பஞ்சபங்கம்) திகழ்கிறார். புனிதமும் புராதனமும் மிக்க இந்த வேணுகோபாலன் இத்திருக்கோயிலில் பிரார்த்தனா மூர்த்தியாய்- புத்திர பாக்கியம் அளிக்கும் புனிதனாய் அருள்கிறார்.

* பெரியகோயில் ஞானக்குழந்தை!

காஞ்சியம்பதி பெருமாள் கோயில், பெரிய கோயில் என்றெல்லாம் போற்றப்படுவதை அனைவரும் அறிவர். வந்தவாசிக்கு அருகில் 'பெரியகோயில்’ என்றே ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி நாயகனாய் ஸ்ரீகல்யாண வரதராஜர் அருள் பாலிக்கும் சந்நிதானத்தில், ஓர் சந்தான கோபாலனும் அருட் காட்சி தருகிறார். வலது கால் விரலை வாயில் வைக்க முயற்சி செய்யும் இந்த பாலகிருஷ்ணனைத் தரிசித்து வழிபட்டால் மக்கட் செல்வமும் மகிழ்ச்சியான வாழ்வும் அமையும் என்பதில் ஐயமேது?!

* தேரெழுந்தூர் அற்புதம்!

மாயவரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தேரழுந்தூர். கம்பநாட்டாழ்வாரின் அவதாரத் தலம். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஆமருவியப்பன் வரப்ரசாதியானவர். திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற பரந்தாமன். ஆநிரை மேய்க்கும் இந்த ஆயவனை 'கோசகன்’ என்றும் கூறுவர். இங்கு வந்து வழிபட்டால், வாழ்வில் வளங்கள் யாவும் பெருகும்.

* மன்னார்குடி செண்டு அலங்காரர்!

ராஜ மன்னார்குடி ராஜகோபாலனை அறியாத அன்பர்கள் இருக்க மாட்டார்கள். நாரதரின் அருள்வாக்குப்படி கோப்பிரளயர், கோபிலர் என்ற முனிவர்களுக்கு, தமது பால லீலைகளை 30 திருக் கோலங்களாக பகவான் காட்டியருளினார். அதில் 30-வது திருக்கோலத்தில் மயங்கிய முனிபுங்கவர்கள், இதே நிலையில் இந்த தலத்தில் காட்சி தந்து கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதன்படியே இந்தத் தலத்தில் ஆநிரை மேய்ப்பவனாக அருள்கிறார் பகவான்.

ருக்மினி, சத்யபாமாவுடன் - இரண்டு மலர்களுக்கு இடையே ஒரு வண்டு போல் எழுந்தருளியுள்ளார். வலது திருக்கையில் மூன்று வளைவுகளை கொண்ட சாட்டைக் கயிற்றுடன் கூடிய பொற்கோல் ஏந்தியபடி, இடது திருக்கரத்தை சத்யபாமாவின் தோளில் வைத்து நின்றகோலத்தில் அருள்கிறார். சாட்டையை 'செண்டு’ என்றும் கூறுவர். அதனால் இவருக்கு செண்டலங்காரர் என்ற திருநாமமும் உண்டு. ஸ்ரீமணவாள மாமுனிகள் இவரை துவராபதி மன்னன் என்றே போற்றுகிறார். ஸ்ரீராஜகோபாலனுடன் சந்நிதியில் காட்சியளிக்கும் ஸ்ரீசந்தான கிருஷ்ணனை, அடியார்கள் தம் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு வணங்கி வழிபட்டால், பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

* பாசுரங்களை காட்டி அருளிய பரந்தாமன்!

நாதமுனிகளின் அவதாரத் தலமான காட்டுமன்னார்குடி, சிதம்பரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் நாயகன் ஸ்ரீகாட்டுமன்னார். பிரபந்தங்களை நாதமுனிகள் மூலம் காட்டிக் கொடுத்ததால் இப்பெயர். அதனால் தலமும் காட்டுமன்னார்குடி ஆயிற்று. இந்த தலத்தில் மூலவர் ஸ்ரீவீரநாராயணபெருமாளாக சதுர்புஜங்களுடன் காட்சியளிக்கிறார். உத்ஸ்வமூர்த்தி ருக்மினி, சத்யபாமாவுடன் ஆநிரை மேய்ப்பவனாக அருள்கிறார். இவர், தோற்றத்தில் ராஜமன்னார்குடி ஸ்ரீராஜகோபாலனைப் போன்றே திகழ்கிறார். பாசுரங்களைக் காட்டி அருளிய இந்த பரந்தாமனைப் பணிய நம் பாவங்கள் யாவும் பொசுங்கும்.

வரவிருக்கும் முக்கிய தினங்கள்

About this blog

சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.

அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.

மேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.

மகான் படே சாஹிப் வரலாறு

மகான் படே சாஹிப் வரலாறு
(படத்தின் மேல் சொடுக்கவும் )

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்
(படத்தின் மேல் சொடுக்கவும் )

Blog Archive

Labels

About This Blog

தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....

நன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்


மேலும் தொடர்புக்கு :


Email : davemathavan@gmail.com

R.V.Karthikeyan
Cell No:
+919994312344
S.Mathavan
Cell No:
+919944287310


மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

About Me

Karthikeyan rvk. and S.Mathavan
Puducherry, Puducherry, India
I'm a very calm person. My strength is my sincerity. My victory formula is "DDT"
View my complete profile

Total Pageviews

Followers

Powered by Blogger.