பாரத மண்ணில் மக்களை நல்வழிப்படுத்த பல மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாபாஜி. இமயமலையில் தற்போதும் வசிப்பதாகச் சொல்லப்படும் இவர் அவதரித்த தலம் சிதம்பரம் அருகிலுள்ள பரங்கிப்பேட்டை ஆகும். இங்கு இவருக்கு கோயில் உள்ளது.
பாபாஜி வரலாறு: பரங்கிப்பேட்டையில் சுவேதநாதய்யர், ஞானாம்பிகை தம்பதியர் வசித்தனர். சுவேதநாதய்யர் இங்குள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கி.பி.203ம் ஆண்டு, கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு நாகராஜன் என பெயர் சூட்டினர். சிறு வயதிலேயே கல்வி, கேள்விகளில் புலமை பெற்றவராக திகழ்ந்த நாகராஜன், பிற்காலத்தில் "பாபாஜி' என பெயர் பெற்றார்.நாகராஜனுக்கு ஏழு வயதானபோது, முருகன் கோயிலில் திருவிழா நடந்தது.
விழாவுக்கு வந்த ஒருவர், அவரைக் கடத்திச் சென்று காசியில் விட்டு விட்டார். அங்கு யோக மார்க்கத்தைக் கற்ற பாபாஜி, பொதிகைமலைக்குச் சென்று அகத்தியரைத் தரிசித்தார். அவர், "பக்தனே! உனக்கு யோக மார்க்கத்தை போதிக்கும் குரு கதிர்காமத்தில் (இலங்கை) இருக்கிறார்,'' எனச் சொல்லி அனுப்பி வைத்தார். 12 நாட்களில் கதிர்காமம் சென்ற பாபாஜிக்கு, அங்கிருந்த போகர் சித்தர் பஞ்சாங்க கிரியா முறைகளை உபதேசித்தார். அதன்பின், பாபாஜி இமயமலைக்குச் சென்றார். தற்போதும் இவர் இமயமலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பிற்காலத்தில் பாபாஜியின் சீடர் ராமைய்யா, இங்கு பாபாஜிக்கு கோயில் எழுப்பினார்.
அவதார விழா: பிரதான சன்னதியில் பாபாஜி, சதுர வடிவ ஆவுடையார் பீடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். வலது கையில் அபயமுத்திரை காட்டுகிறார். இடக்கையை மடியில் வைத்திருக்கிறார். இவ்வூரில் மட்டுமே பாபாஜியை சிலை வடிவில் தரிசிக்கலாம். வியாழனன்று இரவு 7 மணிக்கு பாபாஜிக்கு அபிஷேகம் நடக்கும்.
யந்திர சிறப்பு: பாபாவின் தீவிர பக்தர் ஒருவர், அவரது தரிசனம் கிடைக்க விரும்பி பலமுறை இமயமலைக்குச் சென்றார். அவருக்கு பாபா காட்சி தரவில்லை. சோர்வடைந்த பக்தர், தனக்கு குறிப்பிட்ட நாளில் காட்சி கிடைக்காவிட்டால், தான் மலையிலிருந்து குதித்து உயிரை விடப்போவதாக கூறினார். அப்போதும், பாபாவின் தரிசனம் கிடைக்காமல் போகவே, அவர் இமயமலையில் இருந்து குதித்தார். பாபா அவரது உடலை எடுத்து வரச்செய்து, மீண்டும் உயிர் கொடுத்து தன் சீடராக ஏற்றுக் கொண்டார். இவரையும், மற்றொரு பிரதான சீடரான அன்னை என்பவரையும் யந்திரமாக பிரதிஷ்டை செய்துள்ளனர். அருகிலேயே பாபாஜி மற்றும் முருகன் யந்திரங்கள் உள்ளன.
பாபாஜிக்கு அருளிய முருகன்:
அமைதியே உருவாக அமைந்த தலம் இது. பாபாஜி இவரது சன்னதிக்கு முன், கவுரிசங்கர்பீடம் என்னும் யாக குண்டம் உள்ளது. பாபாஜி அவதார நாளன்று (கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரம்) இதில் யாக பூஜை நடக்கும். அருகில் பாபாஜியின் பாதம் உள்ளது. சன்னதி முன்புள்ள இரண்டு தூண்களில் அன்னை மற்றும் கிரியா அம்மான் என்னும் சீடர்களின் வடிவங்கள் உள்ளன. இந்த தூண்களின் கீழே பஞ்சாங்க கிரியாபீடம் உள்ளது. சன்னதி முகப்பில் விநாயகர் இருக்கிறார். பாபாஜி கதிர்காமம் சென்றபோது, அவருக்கு முருகன் காட்சி தந்தார். இதை உணர்த்தும்விதமாக, ஒரு ஆலமரத்தின் கீழ் பாபவிற்கு முருகன் காட்சி தரும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பாபாஜி சன்னதி விமானத்தில் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
தரிசன நேரம்: கோயில் பகல் முழுவதும் திறந்திருந்தாலும், பாபாஜி சன்னதி 6 - 9.30 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சன்னதிக்கு வெளியே நின்று பாபாஜியைத் தரிசிக்கலாம்.
இருப்பிடம்: சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து செல்லும் மெயின்ரோட்டில் ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ உண்டு.
0 comments:
Post a Comment