"ஓம் கிரியா பாபாஜி நம ஓம்:"
நாம் இப்போது கிரியா பாபாஜி குகையை நோக்கி பயணிக்க போகிறோம்.
மஹா அவதார் பாபாஜியை வணங்கிவிட்டு நம் பயணத்தை தலைநகர் டெல்லியில் இருந்து ஆரம்பிப்போம்.
டெல்லி : இந்தியாவின் தலைநகர். பல மன்னர்களும், மொகலாயர்களும் ஆண்ட பூமி. ராமாயணம், மகாபாரதம் போன்ற சரித்திரங்களோடு தொடர்புடையது. பாண்டவர்கள் ஆண்ட அஸ்தினாபுரத்தை பார்த்து கட்டப்பட்ட நகரம். இந்த நகரத்திற்கு பல பெயர்கள் இருந்தன. முதலில் காண்டபிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்திரப்ரஸ்தம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது புதுடெல்லி என்று அழைக்கப்படுகிறது.
இது புதுடெல்லியில் உள்ள இந்தியாவின் கதவு.
இப்போது நாம் பயணிக்க வேண்டியது டெல்லியில் இருந்து ஹரிதுவாருக்கு.
தேசிய நெடுஞ்சாலை (NH -58) வழியாக 205 கீ.மீ , சுமார் 3 மணி 20 நிமிட பயணத்தில் நாம் ஹரிதுவார் அடைந்து விடலாம்.
ஹரிதுவார் : ஹரிதுவார் என்றால் "கடவுளை அடையும் வழி" என்று பொருள். இங்கு விஷ்ணு வந்து கால் பதித்ததாக நம்பிக்கை உண்டு. இந்த ஊரின் முகப்பில் தென்னிந்திய ஸ்தபதி கட்டிய மிக உயரமான சிவனின் சிலையை காணலாம்.கும்ப மேளா நடக்கும் நான்கு முக்கிய இடங்களில் ஹரிதுவாரும் ஒன்று.
ஆதி அந்தம் இல்லா பரம்பொருளே ......
"ஹர ஓம் நமசிவாய"
இப்போது ஹரிதுவாரிலிருந்து கிளம்பி ரிஷிகேஷ்க்கு செல்வோம்.
ஹரிதுவார்-ரிஷிகேஷ் செல்லும் வரைபடம்.
ஹரிதுவாரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக (NH -58 ) சுமார் 16 .2 கீ.மீ தொலைவில், 30 நிமிடங்களில் ரிஷிகேஷ் அடைந்து விடலாம்.
ரிஷிகேஷ் : சாதுக்கள் நிறைந்த பூமி. எங்கு பார்த்தாலும் துறவிகளும்,சாதுக்களும் தெரிவார்கள். ஏதோ பழைய காலத்தில் இருந்த நகரத்திற்குள் நுழைவது போல் ஒரு எண்ணம் தோன்றும். யோக உலகத்தின் தலைநகரமாக ரிஷிகேஷ் கருதப்படுகிறது.
ரிஷிகேஷில் உள்ள சிவனின் சிலை.
இப்போது ரிஷிகேஷில் இருந்து ருத்ரபிரயாகை நோக்கி பயணிக்க வேண்டும்.
ரிஷிகேஷ் - ருத்ரபிரயாகை செல்வதற்கான வரைபடம்.
ரிஷிகேஷிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக (NH -58 ) சுமார் 143 கீ.மீ தொலைவில், 3 மணி 10 நிமிடங்களில் ருத்ரபிரயாகை அடைந்து விடலாம்.
ருத்ரபிரயாகை : பாண்டவர்கள் தாங்கள் செய்த தவறுக்காக சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்த போது சிவன் கோபமுற்றார். அந்த இடமே தற்போது ருத்ரபிரயாகை என்று அழைக்கப்படுகிறது.
அலக்நந்தா நதியும், பஹீரதி நதியும் கலக்கும் இடம். இந்த இடம் கங்கையின் மிகுந்த சீற்றமிக்க இடமாக காணப்படுகிறது.
இப்போது ருத்ரபிரயாகையில் இருந்து கர்ணப்ரயாகைக்கு பயணிப்போம்.
ருத்ர பிரயாகை - கர்ணப்ரயாகை செல்லும் வழிக்கான வரைபடம்.
ருத்ரபிரயாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக (NH -58 ) சுமார் 32 கீ.மீ தொலைவில், 45 நிமிடங்களில் கர்ணப்ரயாகையை அடைந்து விடலாம்.
கர்ணபிரயாகை : கர்ணன் இங்கு வந்து சூரியனை நோக்கி தவம் செய்து, சக்தி பெற்றதாக வரலாறு கூறுகிறது.
கர்ணபிரயாகையில் நதி ஓடும் காட்சி
நாம் கர்ணபிரயாகையில் இருந்து துரோணகிரி மலைக்கு பயணிப்போம்.
கர்ணபிரயாகை - துரோணகிரி மலைக்கு செல்லும் வரைபடம். கர்ணப்ரயாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக (NH -58 ) சுமார் 76 கீ.மீ தொலைவில், 1 மணி 30 நிமிடங்களில் துரோணகிரி மலையை அடைந்து விடலாம்.
துரோணகிரி மலை : தங்கள் முன்னால் தெரிகிறதே இதுதான் துரோணகிரி மலை. இதிகாசங்களில் வர்ணிக்கப்படும் சஞ்சீவினி மலை இதுதான். அன்று இந்த்ரஜித்தால் தாக்கப்பட்ட லட்சுமணனின் உயிர் காக்க, அனுமன் தூக்கிவந்த மலைதான் இந்த சஞ்சீவினி மலை.
உயிர் காக்கும் மற்றும் வாழ்நாளை நீட்டிக்கும் சஞ்சீவினி மூலிகைகள் நிறைந்த மலை. இங்குதான் வாழ்நாளை நீட்டிக்கும் கிரியா யோகத்தின் ஒளி விளக்கான மஹா அவதார் பாபாஜியின் குகையும் உள்ளது. ஆபத்து நிறைந்த மலை பகுதி. இனி மலையின் மேல் நம் பயணத்தை தொடருவோம்.
இந்த மலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. மிகவும் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டும். போகின்ற வழியில் ஒரு ஆதி பத்ரிநாத் கோவில் ஒன்று உள்ளது.
பாண்டவர்கள் காலத்திய கோவில் இது. திரௌபதி தன் கவலை மறக்க இங்கு வந்திருக்கலாம், கர்ணன் மனம் உடைந்து வந்திருக்கலாம், அர்ஜுனன் தான் வெற்றி பெற்ற மமதையில் வந்திருக்கலாம். காந்தாரி தன் கையால் தொட்டு உணர்ந்து இருக்கலாம். காலத்தை வென்று நிற்கும் இந்த கோவில்,பல காப்பியங்களை தன்னுள் அடக்கியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் நாம் வாகனத்தில் செல்ல இயலாது. அங்குள்ள ஒரு ஜீப்பில் தான் செல்ல வேண்டும்.
கர்ணம் தப்பினால் மரணம் என்று தான் இந்த ஜீப்பில் பயணிக்க வேண்டும். மிக மிக குறுகலான ஆபத்தான பாதை இது.சிறிது தூரம் சென்றவுடன் ஜீப்பும் நின்று விடும். இனிநாம் நடந்து தான் செல்ல வேண்டும். சுமார் 2 கீ.மீ நடக்க வேண்டி இருக்கும். செல்லும் பாதை ஒற்றை அடி பாதை. கையில் ஒரு ஊன்று கோலை வைத்துதான் நடக்க வேண்டும்.
போகிற வழியில் காணப்படும் வழி காட்ட உதவும் பலகைகள். போகிற வழியில் ஒரு அருவி இருக்கிறது.
மூலிகை தன்மை வாய்ந்த இந்த அருவியில் குளித்துவிட்டுத்தான் பாபாஜியை தரிசிக்க செல்ல வேண்டும். உடலும், மனமும் பரிசுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
அங்கு உற்று பாருங்கள். வெள்ளையாக ஒரு இடம் தெரிகிறதா.....!
அங்குதான் முதன் முதலில் மஹா அவதார் பாபாஜி, ராணுவ அதிகாரியான லாஹிரி மகாசாயருக்கு காட்சி அளித்தார். அவர்தான் பாபாஜியின் முதல் சீடர். இந்த இடம் தான் நாம் குகையை நெருங்கி வந்தற்க்கான அடையாளம்.
இரண்டு பாபாஜி குகை உள்ளது. சிறிய குகை ஒன்று மற்றொன்று பெரிய குகை.
சிறிய குகையில் பாபாஜியும், இரண்டு சீடர்கள் மட்டும் இருப்பார்கள். பெரிய குகையில் மற்ற சீடர்கள் இருப்பார்கள்.
இரண்டு மணிநேர நடை பயணத்திற்கு பின் நாம் பாபாஜியின் பெரிய குகையை அடைந்து விட்டோம்.
பெரிய குகையின் தோற்றம். இங்கு வந்து தான் பாபாஜி அனைவருக்கும் போதனை செய்வார்.மிகவும் ரம்யமான இடம்.
இப்போது நாம் சிறிய குகைக்கு செல்வோம். இங்குள்ள யாரும் சிறிய குகையை காட்டி கொடுக்க மாட்டார்கள். புலிகள்,சிறுத்தைகள் நடமாடும் இடம் அது. இருந்தாலும் பரவாயில்லை நாம் அங்கு போவோம். இங்கிருந்து சிறிது தூரம் தான்.
இதுதான் சிறிய குகையின் வாசல்.சரிக்கிவிடும் பாதை இது. பார்த்து பொறுமையாக நடக்க வேண்டும். வாசலில் உள்ள படிகட்டுகள் போல இந்த இடம் அமைந்து உள்ளது.
மெல்ல உள்ளே நுழைவோம்.
கூர்மையான பாறைகள் உள்ளது. மேலும் இது மிகச்சிறிய வழி. அதனால் நாம் ஊர்ந்து, தவழ்ந்து தான் செல்ல வேண்டும்.
பொறுமையாக உள்ளே செல்வோம்.....
வந்து விட்டோம்...! ஆனந்தம்....!
இந்த குகைதான் மஹா அவதார் பாபாஜி தனக்கென்று பயன்படுத்துகிற குகை ஆகும்.
இங்கு ஒரு அதீத அலைகள் பரவுவதை நாம் உணரலாம். ஏனென்றால் பாபாஜியின்
தவ வலிமை உள்ள இடம்.
இன்னும் உள்ளே ஒரு நீண்ட பாதை செல்கிறது. அங்குதான் மஹா அவதார் பாபாஜி உள்ளார். இந்த சிறிய குகைக்கு வருவது இலட்சத்தில் ஒருவருக்கு கிடைப்பதே பெரும் பாக்கியம்.மஹா அவதார் பாபாஜியின் அனுமதி இருந்தால் மட்டுமே இங்கு பிரவேசிக்க முடியும்.
"மஹா அவதார் பாபாஜி குகையில் இருக்கும் போது, நான் என் தாயின் கருப்பையில் இருப்பதாக உணர்கிறேன்"
என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
நான் உங்களை வெறும் வார்த்தைகளால் உங்களை இங்கு அழைத்து வந்துவிட்டேன். உண்மையில் நானோ, நீங்களோ நேரடியாக இந்த காட்சிகளை காண முடியுமா......!
காலம் பதில் சொல்லும்.........!
பாபாஜியின் மீது நமக்கு அளவற்ற பக்தி, தூய உள்ளம்,உண்மையான அர்பணிப்பு இருந்தால், கவலை கொள்ளாதீர்கள், அவரே உங்களை அழைத்துச் செல்வார்.
"ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் : "